தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கெயில் குழாய் பதிப்புக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெறுக..!' - இரணியன்

நாகபட்டினம்: "கெயில் குழாய் பதிப்புக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்" என்று, நிலம் நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டம்

By

Published : Jun 2, 2019, 11:46 PM IST

நாகபட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அனைத்துக் கட்சிகள், இயக்கங்களின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழர் தேசிய முன்னணி நாகபட்டின மாவட்ட தலைவர் பேராசிரியர் முரளிதரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி இயக்கம், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் (லெனினிஸ்ட்), சாதி ஒழிப்பு முன்னணி, மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிலம் நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன் கூறியதாவது,
"பேரழிவு திட்டமான ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். ஹைட்ரோகார்பன், கெயில் குழாய் பதிப்பு திட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். அவர்களை காவல்துறை மூலம் அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும். அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு இந்திய அரசு பயப்படாமல் ஈரானிலிருந்து எண்ணெய் எரிவாயு இறக்குமதி செய்ய வேண்டும்.

உள்நாட்டு எண்ணெய் உற்பத்தி மூலம் அந்நிய செலவாணியை ஈட்ட முடியும் என்ற மத்திய, மாநில அரசுகளின் தவறான பரப்புரையை கைவிட வேண்டும். கெயில் குழாய் பதிப்பின்போது நடவு செய்யப்பட்ட வயலில் இயந்திரங்களை இயக்கி சேதப்படுத்திய நிறுவனத்துக்கு எதிராக விவசாயிகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல்துறை புகாரை ஏற்காமல் விவசாயிகளை அலைக்கழிக்கிறது. விவசாயிகளின் புகாரை ஏற்று கெயில் நிறுவனத்தின் ஒப்பந்த நிறுவனமான துலானி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று, காட்டமாகக் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details