பிறந்தநாளுக்கு வாங்கிய ஐஸ்கிரீம் கேக்கில் நெளிந்து ஓடிய புழுவின் வீடியோ மயிலாடுதுறை:பிறந்தநாளுக்காக வாங்கிய கேக்கிற்குள் புழு நெளிந்த வீடியோ (a worm inside an ice cream Cake) வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நகராட்சி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடையில் இன்று (செப்.26) ஆய்வு மேற்கொண்டு காலாவதியாகிய உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பேக்கரியில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி சீர்காழி தாலுகா நாங்கூர் பகுதியைச் சேர்ந்த ஷோபனா என்பவர் தனது மகன் பிறந்தநாளுக்காக ஐஸ்கிரீம் கேக் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். பின்னர், அன்று மாலை வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
அப்போது பிறந்தநாளுக்கு வந்த அனைவருக்கும் கேக்கை வெட்டி கொடுத்தபோது, அதில் 'புழு' ஒன்று நெளிந்து ஓடியுள்ளது. இதைக் கண்ட அக்குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, கேக் முழுவதையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் பார்த்துள்ளனர். அப்போது, பல நாட்கள் கடந்து வீணாகிப்போன தின்பண்டங்களில் இருந்து நூல் வருவதைப்போல் கேக்கில் இருந்து நூல் நூலாகப் பிரிந்து வந்துள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஷோபனா இன்று (செப்.26) மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலையிடம் தனியார் பேக்கரியில் வாங்கிய கேக்கில் புழு இருந்ததைக் கூறி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தார். இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை நகராட்சி உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சீனிவாசன், அப்பேக்கரிக்குச் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது பிரட், ஸ்நாக்ஸ், குளிர்பானங்கள், கேக் வகைகளில் தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த தின்பண்டங்கள் மற்றும் குளிர்பானங்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறையினர், அவற்றை அழித்தனர்.
பின்னர், தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யப்பட்டது உறுதிபடுத்தப்பட்டது. இதன் பேரில் அந்நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் பரிந்துரை கடிதம் வழங்க உள்ளதாகவும், நிறுவனத்தார் நுகர்வோரிடம் அறிக்கை பெறப்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளது என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கேக்கை சாப்பிடுவதற்கு முன் புழுவைப் பார்த்ததால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"உடல்தான் கோயில்".. 58 வயதிலும் கட்டுக்கோப்பாக இருக்கும் காவலர்..