மயிலாடுதுறை:மணல்மேடு காவல் சரகத்திற்குட்பட்ட ராஜசூரியன்பேட்டை கிராமத்தில், சாராயம் விற்பனை செய்வதாக மணல்மேடு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு 2 காவலர்கள் சென்றுள்ளனர்.
அப்போது சாராயம் விற்பனை செய்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர். அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மேலத்தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து மதன்குமார் என்ற காவலர் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அங்கிருந்த பெண் ஒருவர் தடுத்தும், காவலர் மதன்குமார் அடித்ததால் உள்காயமடைந்த சுரேஷ் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆடுமேய்க்க சென்ற இளைஞரைத் தாக்கிய காவலர் சாராய விற்பனையில் ஈடுபட்டவரை விட்டுவிட்டு அப்பாவியை காவலர் தாக்கியதைக் கண்டித்து, ராஜசூரியன் பேட்டை கிராமமக்கள் மணல்மேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுரேஷை தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 2 மணிநேரத்திற்கும் மேலாக சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
இச்சம்பவம் அறிந்து மணல்மேடு காவல் நிலையம் வந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில் போராட்டத்தைக் கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:உயிரை மாய்த்த ஆசிரியை: வீதிக்குவந்த மக்கள் - நீதிக் கோரி போரட்டம்