மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான மாயூரநாதர் கோயில் அமைந்துள்ளது. இது திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடப் பெற்ற பழைமை வாய்ந்த கோயிலாகும். இங்குள்ள காவிரிக் கரையில் அம்பாள் மயிலாக இறைவனை பூஜித்ததால், சிவன் மயிலாக உருவம் கொண்டு பார்வதி தேவியுடன் சேர்ந்து மயூரதாண்டவம் ஆடி மயில் உருநீங்கி சுயஉரு பெற்றாள் என்பது ஐதீகம்.
இதை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ஐப்பசி 1ஆம் தேதி முதல் மாயூரநாதர், வதான்யேஸ்வரர் கோயில்களில் இருந்து சாமி புறப்பட்டு, காவிரியில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக மயூரநாதர் கோயில், வதான்யேஸ்வரர் கோயில், படித்துறை விஸ்வநாதர் கோயில், அய்யாரப்பர் கோயில், காசி விஸ்நாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் கடந்த 7ஆம் தேதி கொடியேற்றப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. மேலும் 7ஆம் திருநாளான நேற்று அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்று, இரவு மாயூரநாதர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
அதில் மாயூரநாதர் - அவையாம்பிகையுடன் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினர். தொடர்ந்து ஊஞ்சள் உற்சவம், மாலை மாற்றுதல் நடைபெற்று பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். சிவாச்சாரியார்கள், வேத விற்பனர்கள் மந்திரம் ஓத, மாங்கல்ய தாரணம் நடைபெற்றது. அதனைத் தொடாந்து பூரணாகுதி செய்யப்பட்டு, சுவாமி அம்பாளுக்கு சோடச தீபாராதனை மகாதீபாராதனை நடைபெற்றது.