மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீன மடாதிபதியை பல்லக்கில் தூக்கி வீதி உலா வர மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தடை விதித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. இதற்கு, அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில், முதலமைச்சர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேரவையில் தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபடவேண்டாம்:இந்நிலையில், குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலில் அமைந்துள்ள கட்டளை மடத்தில் தங்கியுள்ள தருமபுரம் ஆதீனம் 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை, மயிலாடுதுறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், உளவுத்துறை இன்ஸ்பெக்டர் சதீஸ், உளவுத்துறை உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் குழுவினர் இன்று (மே 7) நேரில் சந்தித்து பேசினர். தனியறையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தருமபுரம் ஆதீனத்தை நேரில் சந்தித்த உளவுத்துறை அலுவலர்கள் பட்டினப்பிரவேசம் பல்லக்கு தூக்கிச் செல்லும் நிகழ்ச்சிக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் சுமூகமான முடிவு எடுக்க வாய்ப்புள்ளதால் போராட்டங்கள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆதீனத்தின் தரப்பில், குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்தும் பணியில் உள்ளதாவும், அரசின் முடிவுக்காக காத்திருப்பதாகவும், தருமபுரம் ஆதீனம் சார்பில் எந்தவித போராட்டங்களிலும் ஈடுபடவில்லை என்றும் வெளியில் நடைபெறும் போராட்டத்திற்கு நாங்கள் பொறுப்பு அல்ல என்றும் கூறியதாக கூறப்படுகிறது.
பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்ததற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், காவல்துறையினர் இன்று ஆதீனகர்த்தரை சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "தருமபுர ஆதீனத்தின் மனிதர்களை பல்லாக்கில் தூக்கும் விவகாரத்தில் ஆதீனத்துடன் பேசி நல்ல முடிவை முதலமைச்சர் எடுப்பார்" - அமைச்சர் சேகர் பாபு!