மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பட்டு வருகிறது, கடந்த சில மாதங்களில் கச்சேரி, சின்னக்கடை வீதி, கிளை சிறைச்சாலைகள் என பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவுநீர் வெளியேறியதால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் திடீர் பள்ளங்கள் உருவாகியது.
பாதாள சாக்கடை குழாய் உடைப்பு - பொதுமக்கள் அவதி - பாதாள சாக்கடை திட்டம்
நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் கடந்த சில மாதங்களில் 6 முறை பாதாள சாக்கடை குழாய் உடைந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் 6வது முறையாக தரங்கம்பாடி சாலை கொத்து தெருவில் பாதாள சாக்கடை குழாய் உடைந்ததால் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் பள்ளத்தை சுற்றி தடுப்புகளை அமைத்தனர். மேலும் இச்சம்பவம் அறிந்த காவல்துறையினரும் அப்பகுதியில் தடுப்புகளை ஏற்படுத்தினர். உடனடியாக அப்பாதையில் கழிவுநீர் செல்வது நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் பள்ளம் ஏற்பட்ட இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு வேகம் வேகமாக சாலை சரி செய்யப்பட்டது. ஆனால் மீண்டும் அதே இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை பாதாள சாக்கடை திட்டத்தில் ஏற்படும் கோளாறுகளால் தொற்றுநோய் மற்றும் மிகப்பெரிய விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது, ஆகையால் இப்பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் நகராட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.