வாசல்
புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, இன்னும் ஒரு வருடம் கூட தாண்டாத நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கிறது மயிலாடுதுறை. இம்மாவட்டத்தில் ஒரு மக்களவைத் தொகுதியும், சீர்காழி (தனி), மயிலாடுதுறை, பூம்புகார் என, மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
சீர்காழி (தனி): தமிழ் இசையை வளர்த்த மூவர்களான முத்துதாண்டவர், அருணாச்சல கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோர் பிறந்த ஊர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமான திருவெண்காடு, செவ்வாய் ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோயில்களைக் கொண்டது.
இந்தத் தொகுதியின் பிரதான தொழில் விவசாயமும், மீன்பிடிப்பும். சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் நெல் பயிரிடப்படுகின்றன. கொடியம்பாளையம் தீவு முதல் வானகிரி வரை 18 மீனவ கிராமங்களில் வசிக்கும் மீனவர்களில் 40 ஆயிரம் பேர் நேரடியாக மீன்பிடிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தைக்கால், சேந்தங்குடி, புத்தூர் போன்ற பகுதிகளில் பிரம்புக் கூடை மற்றும் பாய் தயாரிக்கும் கைவினை தொழில்கள் நடைபெறுகின்றன. சீர்காழியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடல்நீர் உட்புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும், கடைக்கோடி கடற்கரை கிராமங்களுக்கும் குடிநீர் சென்று சேரும் வகையில், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும், பழையாறு, திருமுல்லைவாசல் முகத்துவாரங்களை படகுகள் தரை தட்டாதவாறு தூர்வாரப்பட வேண்டும் என்பன தொகுதிவாசிகளின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள்.
மயிலாடுதுறை: பல்வேறு ஆன்மீக சிறப்புகளைக் கொண்டது மயிலாடுதுறை தொகுதி. இந்தப் பகுதியில் பாயும் காவிரி துலா கட்டத்தில், ஐப்பசி மாதம் முழுவதும் நடக்கும் துலா உற்சவத் திருவிழா இந்தியா முழுவதும் பிரசித்தம். மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் வயலும், வயல் சார்ந்த இடங்களை மட்டுமே கொண்ட தொகுதி இது.
மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொகுதியின் முக்கியப் பிரச்னை பாதாள சாக்கடை திட்டம். இங்கு நிறைவேற்றப்பட்டுள்ள பாதாளச் சாக்கடை குழாய்கள் உடைப்பெடுத்து கழிவு நீர் சாலைகளில் தேங்குவதும், சாலைகளில் திடீர் பள்ளங்கள் விழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
கடந்த 1986 ஆம் ஆண்டு இயக்கப்பட்டு வந்த மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயில் சேவையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற இத்தொகுதி மக்களின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும், மயிலாடுதுறையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும், தலைஞாயிறு பகுதியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து மீண்டும் செயல்படுத்த வேண்டும் என நீளுகிறது கோரிக்கைப் பட்டியல்.
மயிலாடுதுறை தொகுதிகள் உலா: தேர்தல் 2021: எதிர்பார்ப்பும், களநிலவரமும்...!
பூம்புகார்:கோவலனும், கண்ணகியும் பிறந்ததாகவும், சதுக்கபூதம் காவல் காத்ததாகச் சிலப்பதிகாரம் சொல்லும் ஊர். காவிரியாறு வங்கக்கடலில் கலக்கும் கழிமுகத்தில் இருக்கும் தொகுதி.தென்னாப்பிரிக்காவில் காந்தி நடத்திய இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட தில்லையாடி வள்ளியம்மைப் பிறந்த ஊரைக் கொண்ட தொகுதி. தமிழின் முதல் புத்தகம் அச்சிடப்பட்ட தரங்கம்பாடியும், அங்குள்ள டேனீஷ் கோட்டையும் தொகுதிக்குண்டான சிறப்புகளுள் சில. விவசாயத்தையும், மீன்பிடிப்பையும் பிரதானமாகக் கொண்ட தொகுதி.
தரங்கம்பாடி, சின்னங்குடி, சந்திரபாடி பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டு நீர் உட்புகுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கப்படுவது, மயிலாடுதுறை நகராட்சியின் பாதாள சாக்கடை திட்டத்தின் கழிவுநீர் செம்பனார்கோயில் பகுதியில் சத்தியவான் வாய்க்காலில் திறந்து விடப்படுவதும், சுருக்குமடி வலை பயன்படுத்தப்படுவது பெரும் தொகுதியின் பிரதான பிரச்னையாகவுள்ளன.
அதேபோன்று முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயில் போக்குவரத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த, 2016-17 ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டது. ஆனால் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. இத்திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவதோடு; பூம்புகாரில் அகழாய்வு நடத்தப்பட வேண்டும் என்கின்றனர் தொகுதிவாசிகள்.
களநிலவரம்:
புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்ட ஒரு வருடத்திற்குள்ளேயே சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கிறது மயிலாடுதுறை. புதிய மாவட்டத்திற்கான தலைமை மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் போன்ற அடிப்படை கோரிக்கைகளுடனும், பழைய தேர்தல் வரலாறுடனும் இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கிறது இம்மாவட்டம்.
இங்குள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் அதிமுகவிடமே உள்ளன. இந்த முறையும், அதனைத் தக்கவைக்க அதிமுக அதிக முனைப்பு காட்டும். மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினரின் வாக்கு வங்கியால் திமுகவும் செல்வாக்குள்ள கட்சிதான் என்றாலும், சில தொகுதியைத் தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்தும், சில தொகுதியில் நேரடி போட்டியைத் தவிர்த்து வருகிறது.
அந்த நிலையை மாற்ற திமுக தீவிரம் காட்டும். இருந்தாலும் மயிலாடுதுறையைத் தனி மாவட்டமாக அறிவித்து, அப்பகுதி மக்களின் கால் நூற்றாண்டு கோரிக்கையை நிறைவேற்றியுள்ளதால், பந்தயத்தில் கொஞ்சம் முந்தி நிற்கிறது அதிமுக.