மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவிற்கு உட்பட்ட காத்திருப்பு, செம்பதனிருப்பு, அல்லிவிளாகம், ராதாநல்லூர் ஆகிய கிராமங்களில் பொங்கல் கரும்பு சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. கரும்பு நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நிவர், புரெவி புயல்கள் காரணமாக, கரும்புகள் வயலில் சாய்ந்தும், வடிகால்கள் தூர்வாரப்படாத காரணத்தால் மழைநீர் வயல்களில் சூழ்ந்தும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஏக்கருக்கு ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் வரை விவசாயிகள் செலவு செய்திருந்த நிலையில், சாய்ந்த கரும்புகளை தூக்கி நிறுத்தி கட்டுவதற்கு ஏக்கருக்கு ரூபாய் முப்பதாயிரம் வரை கூடுதல் செலவு செய்துள்ளனர். இந்நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுக்குகாக, ஒரு கரும்பு 15 ரூபாய் என்ற வீதம் அரசு நேரடி கொள்முதல் செய்யவுள்ளது.