மயிலாடுதுறை:விழுப்புரம் முதல் நாகை வரை 180 கி.மீ. தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த நான்கு வழிச்சாலை கொள்ளிடத்தில் தொடங்கி தரங்கம்பாடி வரை 44.5 கிலோமீட்டர் தொலைவிற்கு செயல்படுத்தப்படுகிறது.
தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை டெல்லியைச் சேர்ந்த வில்ஸ்பன் நிறுவனம் செய்து வருகிறது. இந்நிலையில் திருக்கடையூர் அம்புபோடும் சாலையில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இடத்தில் இன்று சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. மயிலாடுதுறை எஸ்பி.நிஷா தலைமையில் டிஎஸ்பிக்கள் சீர்காழி லாமேக், மயிலாடுதுறை வசந்த ராஜ் ஆகியோர் மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி நிறுத்தி வைக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இடத்தில் குத்தகை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளை விட்டு நிலங்களை மட்டும் தற்போது கையகப்படுத்தி சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான நிலத்தை குத்தகை அடிப்படையில் வைத்திருப்போருக்கு உரிய இழப்பீடு வழங்காமல் நான்கு வழிச் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.