மயிலாடுதுறை: கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரானது மேட்டூரில் இருந்து கடந்த மூன்று நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் தற்போது ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்கு சென்று கொண்டுள்ளது.
சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே செல்லும் உபரி நீரானது பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது. தொடர்ந்து வெள்ள நீர் அதிகரித்து வருவதால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள ஆற்றங்கரை தெரு மற்றும் ஆற்றில் உள்ளே அமைந்துள்ள நாதல்படுகை உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
அதேபோல் நாதல்படுகை மற்றும் முதலைமேடு திட்டு கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த 300 ஏக்கர் பரப்பளவிலான பருத்தி, சோளம், வெண்டை கத்தரி, உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் மற்றும் முல்லை, மல்லி, செவ்வந்தி உள்ளிட்ட பூச்சொடிகள் முற்றிலுமாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. நேற்று முதல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாலும் மேற்கொண்டு சில தினங்களுக்கு தண்ணீர் குறைவதற்கான வாய்ப்பு இல்லாததாலும் பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.