மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சம்பா சாகுபடி மற்றும் நெல்லின் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் குறித்த முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், நாகை மாவட்டத்தில் உள்ள வேளாண்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
நாகை மாவட்டத்தில் நடப்பாண்டில் சம்பா சாகுபடி செய்ய 1.33 லட்சம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விவசாய பணிகள் நடைபெறுவதாக அலுவலர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடவு செய்யப்பட்ட வயல்களில் தட்சிணாமூர்த்தி ஆய்வுசெய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ''டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்ய 13.5 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சாகுபடி பணிகள் நடைபெற்றுவருகிறது. நாகை மாவட்டத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
கிசான் திட்டத்தில் முறைகேடு செய்த தகுதி இல்லாத விவசாயிகளிடமிருந்து 68 சதவீதம் அதாவது ரூபாய் 105 கோடி திரும்பப் பெறப்பட்டுள்ளது. கிசான் திட்டத்தில் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் அதிகளவில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.