நாகப்பட்டினம்:இறந்த உறவினர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2ம் தேதி கல்லறை தினமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். அதன் அடிப்படையில், கல்லறைத் திருநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்ய அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நேற்று காலை நடைபெற்றது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்ய மாதா பேராலயத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்ற கிறிஸ்துவர்கள் வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட பாதிரியார்கள் மற்றும் தங்களுடைய உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து, உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அதனை தொடர்ந்து, இஸ்ரேல் பாலஸ்தீன போரில் உயிர் நீத்தவர்களுக்கும் ஆன்மா சாந்தியடைய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதைபோல் வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் நினைவு ஸ்தூபியில் வேளாங்கன்னி பேராலயத்தின் சார்பில் கல்லறைத்திருநாள் வழிபாடு நடைபெற்றது.
வேளாங்கண்ணி பேராலயத்தில் நடந்த கல்லறை திருநாளில் வெளிநாடு, வெளி மாவட்டங்கள், வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:இறைவன் எல்லாவற்றிற்கும் முற்றுப் புள்ளி வைப்பார்: இசையமைப்பாளர் டி.இமான்!
கல்லறை திருநாள் கடைபிடிக்க காரணம் : இயேசு கிறிஸ்து உயிரிழந்த மூன்றாம் நாள் உயிர்ப்பித்து எழுந்தார். இறப்பு என்பது தொடக்கம் மட்டுமே என்பதை உணர்த்துவதே இதன் முக்கிய காரணமாக கருதப்பட்டும், ஆன்மாவிற்கு எப்போதும் அழிவு கிடையாது என்பதை உணர்த்துவதற்காகவே மூன்றாம் நாள் அவர் உயிர்த்தெழுந்ததாகவும் கூறப்படுகிறது.
என்றும் அழிவில்லாமல் வாழ்வது ஆன்மா, அதனை தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது என கூறுகின்றனர். அதற்காகவே கல்லறை திருநாளில் இறந்தவர்களின் கல்லறைக்கு பூஜை செய்து, படையில் வைத்து உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த கல்லறை திருநாள் அன்று இறந்தவர்களின் சமாதிக்கு சென்று அதனை சுத்தப்படுத்தி மலர்களை தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அவர்களுக்கு பிடித்த உணவுகளை படையில் வைத்து பூஜை செய்வது வழக்கமாகும். உடலால் எங்களை விட்டுப் பிரிந்தாலும் உள்ளத்தில் எப்போதும் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று முன்னோர்களை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப்படுவதில் இந்த கல்லறை திருநாளாகும். இறந்த முன்னோர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் தினமாகக் 'கல்லறை திருநாள்' கடைப்பிடிக்கப்படுவது. மூதாதையர்கள் தங்களின் குடும்பத்தினருக்கு ஆசி வழங்க வேண்டி, வழிபடும் நாள் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க:இறந்தவர்களின் ஆன்மாவை நினைவு கூறும் கல்லறை திருநாள்: கல்லறையில் திரண்ட உறவினர்கள்!