நாகை மாவட்டம் மயிலாடுதுறை கோட்டத்தில் இந்த ஆண்டு பருத்தி நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், செம்பனார்கோவில் பகுதிகளில் உள்ள வேளாண்மை விற்பனை மையங்களில் கிடங்கு கொள்ளளவைவிட அதிகமான பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.
இந்திய பருத்தி கழகத்தினர் வருகையால் ரூ.5000க்கும் மேல் விலை கிடைத்தாலும், பல விவசாயிகளுக்கு உற்பத்தியான பருத்தியை பாதுகாப்புடன் விற்க முடியாமல் தவித்துவருகின்றனர். மேலும், கிடங்கு கொள்ளளவைவிட அதிகமாகவரும் பருத்தி மூட்டைகளை வெளியில் வைத்து விடுவதால், மழை நேரத்தில் பாதிக்கப்படுவதோடு, கிடங்கில் உள்ள மூட்டைகள் மிகக் குறைந்த விலைக்கே விற்பனை ஆகிறது.
இந்நிலையில், செம்பனார்கோவிலில் ஆயிரம் குவிண்டால் கிடங்கு வசதி உள்ளது. ஆனால் நான்காயிரம் குவிண்டால் கொண்டுவந்துள்ளனர். அதேபோன்று, குத்தாலத்தில் நான்காயிரம் குவிண்டால் கிடங்கு வசதி உள்ளது. ஆனால் ஏலத்திற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து எட்டாயிரம் குவிண்டால் வரை விவசாயிகள் கொண்டுவந்தனர்.
மேலும், திறந்தவெளியில் வைத்திருக்கும் பருத்தி மூட்டைகள் மழையில் நனைந்தால் இந்திய பருத்தி கழகத்தினர் கொள்முதல் செய்வதில்லை. இதனால் தனியார் வியாபாரிகள் தரமான பருத்தியைக்கூட குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். எனவே குடோன் வசதி செய்துதர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.