நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நல்லத்துக்குடி மட்டுமின்றி செருதியூர், முளப்பாக்கம், அகரகீரங்குடி, மூங்கில் தோட்டம், கோடங்குடி உள்ளிட்ட எட்டு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இங்கு, தினமும் சராசரியாக இரண்டாயிரம் மூட்டைகளுக்கு மேல் நெல் கொண்டு வரப்படுகிறது. ஆனால் தினசரி 800 மூட்டைகள் மட்டுமே இங்கு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் சேமிப்புக் கிடங்கில் 3,000 மூட்டைகளை மட்டுமே அடுக்கி வைக்க இடவசதி உள்ளது. இதனால் கூடுதலாகக் கொண்டு வரப்பட்டுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை, கொள்முதல் நிலையத்திலேயே விவசாயிகள் அடுக்கி வைத்துவிட்டு 15 நாட்களுக்கு மேலாக காத்திருந்து வருகின்றனர்.