இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, தாய்லந்து போன்ற நாடுகளை கடுமையாகத் தாக்கி இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. தமிழில் 'ஆழிப்பேரலை' என அழைக்கப்படும் சுனாமியானது, 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 30 கி.மீ., ஆழத்தில், ரிக்டர் அளவில் 9.1 என்ற அளவுக்குப் பதிவாகி, பூகம்பத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து கடலில் எழுந்த ஆழிப்பேரலைகள் இந்தோனேசியா, இந்தியா, மியான்மர், மலேஷியா, இலங்கை, தாய்லாந்து உட்பட 14 நாடுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றது. இது உலகின் மோசமான இயற்கைச் சீரழிவுகளில் ஆறாவது இடம் பிடித்தது. உயிர் சேதத்துடன், கோடிக்கணக்கான ரூபாய் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது.
அதற்கு முன், 'சுனாமி' என்ற வார்த்தையையோ அதன் கோர முகத்தையோ அறிந்திடாத இந்தியர்களுக்கு அது ஏற்படுத்திச் சென்ற காயத்தின் வடு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஆறுவதற்கு வாய்ப்பில்லை எனலாம். ஏனெனில், சில நிமிடங்கள் மட்டுமே அடித்துச் சென்ற சுனாமியாது ஏற்படுத்திய சோகத்தின் தன்மை அத்தகையது.
இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சுனாமி கடுமையாகத் தாக்கியது. இதனால் இந்தியாவில் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழ்நாடு கடலோர மாவட்டங்களான சென்னை, நாகை, கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர்.
குறிப்பாக, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு பிணக்காடாக காட்சியளித்தது. உயிரிழப்பு இல்லாமல் சேதத்தின் மொத்த மதிப்பு ரூ.733 கோடி என அரசு அறிவித்துள்ளது. அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தவர்கள் 6,065 பேர், தாய் - தந்தை இருவரையும் இழந்து ஆதரவின்றி நின்ற குழந்தைகள் 243 பேர், தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவரை மட்டும் இழந்தவர்கள் 1,329 பேர், இறந்துபோன 6,065 பேரில் கிறிஸ்துமஸ் தினத்துக்காக வேளாங்கண்ணிக்கு வந்திருந்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 536 பேர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 240 பேர் எனப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கண் கலங்க வைக்கிறது.