இந்து சமய அறநிலையத்துறைக்கு இந்து பாரத மகா சபா துணைத்தலைவர் எச்சரிக்கை மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே ராதாநல்லூர் கிராமத்தில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் இந்து ஆலய அர்ச்சகர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில ஆலய பாதுகாப்பு பிரிவு தலைவர் ராமநிரஞ்சன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தேசிய துணைத் தலைவர் பாலசுப்ரமணியன் ஜீ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சி வெற்றிகரமாக சந்திராயனை நிலை நிறுத்தியதற்கு வரவேற்பும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம். இந்தச் செயலை மக்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அகில பாரத இந்து மகாசபா ஆன்மீகத்தையும், தேசியத்தையும் வளர்க்க வேண்டும். ஆன்மீகம் வளர்க்கப்பட வேண்டும் என்றால் ஆலயத்தை பாதுகாக்க வேண்டும். ஆலயங்களை பாதுகாப்பதும், பராமரிப்பதும் நமது செயல் என்பதால் ஆலயபாதுகாப்பு பிரிவை தொடங்கி செயல்படுத்தி வருகிறோம். வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயில் திருப்பணி தொடங்கி பணிகள் எதிர்பாராத சூழ்நிலைகளால் முடங்கி கிடக்கிறது. திருப்பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க:அதிமுக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் குறித்து இழிவாக பாடல் பாடியது கண்டிக்கத்தக்கது- வாகை சந்திரசேகர் ஆவேசம்!
திருவிழந்தூர் பரிமளரங்கநாதர் கோயில் முரளி தீட்சிதர், ரங்கப்பட்டருடன் சில அறநிலையத்துறை அலுவலர்களும் வழக்கு ஒன்றில் சிக்கினர். அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் பட்டாச்சாரியார்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படாமல் உள்ளது. அரசு இதனை பரிசீலனை செய்ய வேண்டும்" என வலியுறூத்தினார்.
"திருநாகேஸ்வரம் கோயில் தரைதளம் அமைப்பதற்கான 70 லட்சம் ரூபாய் நிதி என்று கூறியுள்ளனர். ஆனால், 30 லட்சம் ரூபாய்க்குத்தான் பணி செய்யப்பட்டு உள்ளது. இதனை தட்டிகேட்ட இந்து மகாசபா நிர்வாகிகள் மீது தவறான கருத்துக்களை சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இது குறித்து அறநிலையத்துறை உரிய விசாரணை செய்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சூரியனார்கோயில், திங்களூர் கோயில் கும்பாபிஷேகங்களை விரைவில் செய்தாக வேண்டும். கோயில் சொத்துக்கள் தனியார் வசம் இருப்பதை மீட்க வேண்டும். தலை ஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக வாக்குறுதியில் தெரிவித்தது. ஆனால் அதனை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது. அதனை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லாத விஷயங்களில் தலையிடுகிறது. ஆதீனத்திற்கு சொந்தமான கோயில்களில் கணக்கு வழக்குகளில் தவறு இருந்தால் பார்ப்பது தான் அறநிலையத்துறை. அதைத் தவிர்த்து ஆதீன கோயில்களை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் அறநிலையத்துறை ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது" என பல்வேறு கோரிக்கைகளுடன் அவரது கண்டனங்களையும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:‘பெண்களுக்கு எதிராக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ - ஹெச்.ராஜாவுக்கு நீதிமன்றம் கண்டனம்!