மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் அடுத்தடுத்து பூட்டிய கடைகளை உடைத்து கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றன.
இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின்பேரில், காவல் துணைக்கண்காணிப்பாளர் வசந்தராஜ் கண்காணிப்பில், காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் உட்கோட்ட அளவில் தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபரைக் காவல் துறையினர் தேடிவந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 120 கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், தலைக்கவசம் அணிந்து குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு, பின்னர் தலைமறைவானது தெரியவந்தது.
இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் ஒரு கடையின் பூட்டை உடைக்க முயன்ற நபரை அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மடக்கிப் பிடித்து அவரை அடையாளம் கண்டறிந்து கைதுசெய்தனர்.