நாகப்பட்டினம் மாவட்டம் நெல் சாகுபடிக்கு புகழ்பெற்றது என்றாலும், பரவலாக நிலக்கடலையும் இங்கு பயரிடப்படுகிறது. 90 நாள் குறுகிய காலத்தில் பயன்தரக்கூடிய பணப்பயிர், கால்நடைகளுக்கு நிலக் கடலைச் செடி சிறந்த தீவனம் என்பதால் நிலக்கடலையைப் பயிர் செய்வதில் இப்பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இந்நிலையில், கஜா புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான கடலோர கிராமங்களில், நிலத்தடி நீர்மட்டத்தில் கடல்நீர் உள்புகுந்ததால், மண்ணின் தன்மை முற்றிலும் மாறி உப்புத் தன்மை அதிகரித்துள்ளது.
இதனால் புயலுக்குப் பின்னர் கடலோர கிராமங்களில் விவசாயப் பணிகள் சரியாக நடைபெறவில்லை. இந்தப் பகுதிகளில் பயிரிட்ட சி7 ரக நிலக்கடலை முளைக்காமல் போயுள்ளதால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
சி7 ரக நிலக்கடலை முளைக்காமல் போயுள்ளதால் விவசாயிகள் கடும் வேதனை 60 நாள்கள் ஆன நிலையில் கடலை இல்லாமல் வெறும் செடியாக வளர்ந்திருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் கண்டியன்காடு, வேட்டைக்காரனிருப்பு, புதுப்பள்ளி, விழுந்தமாவடி உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலைகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறும் விவசாயிகள், விவசாயத்திற்கு ஏற்ற வகையில் நிலத்தைப் பக்குவப்படுத்துவதில் சிரமம் நீடித்துவருவதாகவும் கூறுகின்றனர்.
500 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலைகளுக்கு மகசூல் இழப்பு பல பகுதிகளில் நன்றாக விளையும் இந்த ரக நிலக்கடலை கஜா புயலுக்கு பிறகு மண்ணின் தரம் மாறியதால் முளைக்காமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விளக்கமளிக்க நாகை மாவட்ட வேளாண் துறை அலுவலர்கள் மறுத்துவிட்டனர். எனவே, பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அலுவலர்கள் நேரில் ஆய்வு நடத்தவும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், பயிரிடுவதற்கான விதை நிலக்கடலையை அரசே வழங்கி, கொள்முதல் நிலையங்களையும் அமைத்துத் தர வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.