கரோனா அறிகுறிகள் கொண்ட ஊழியர்களுடன் வியாபாரத்தில் ஈடுபட்ட பிரபல நகைக்கடை - அதிரடி நடவடிக்கை எடுத்த நகராட்சி - நகராட்சி அதிரடி நடவடிக்கை
நாகப்பட்டினம் : மயிலாடுதுறை ஜிஆர்டி ஜூவல்லரி கிளை, தங்களது ஊழியர்களுக்கு கரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததை மறைத்து வியாபாரத்தில் ஈடுபட்டதை அடுத்து, கடையை மூடி நகராட்சி நிர்வாகத்தினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில் பிரபல ஜி.ஆர்.டி. தங்கநகைக் கடை இயங்கி வருகிறது. அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு கடுமையான காய்ச்சல் இருந்து வந்த நிலையில், காசாளர் ஒருவரை கரோனா பரிசோதனைக்கு அனுப்பாமல் கடையின் அறை ஒன்றிலேயே தங்க வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அக்கடை ஊழியர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதைக் கேள்விப்பட்ட மயிலாடுதுறை நகராட்சி ஊழியர்கள் அக்கடைக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில், கடையில் இருந்தவர்கள் முறையான பதில் அளிக்காமல் தவிர்த்துள்ளனர். மேலும், உடனடியாக காசாளரை திருத்துறைப்பூண்டிக்கு இருசக்கர வாகனம் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், கடுமையான காய்ச்சல் இருந்ததால் அவர், இன்று (ஆகஸ்ட் 7) காலை நாகப்பட்டினம் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குக் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஊழியர்கள் குறித்து கடையில் இருந்தவர்கள் நகராட்சி அலுவலர்களுக்கு பதில் அளிக்காததைத் தொடர்ந்து, கடையை மூடி நகராட்சியினர் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், 50க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.