நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த கேவரோடை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளும் அவருக்ளுக்கு பாடம் கற்பிக்க இரண்டு ஆசிரியர்களும் உள்ளனர்.
இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் இப்பள்ளியை ஆய்வு செய்வதற்காக தொடக்கக் கல்வி அலுவலர் சென்றுள்ளார். அப்போது அந்தப் பள்ளியில் நுழைந்தவுடன் பள்ளியின் பசுமையான சுற்றுச்சூழலை கண்டு வியப்படைந்த அலுவலருக்கு மேலும் பல வியப்புகளை அப்பள்ளியில் அவரால் காண முடிந்தது.
அப்பள்ளியில் பயிலும் நான்காம் வகுப்பு மாணவர்கள், ரோபோ குறித்த ஒரு உரையாடலை மிக சரளமாக ஆங்கிலத்தில் உரையாடும் காட்சியைக் கண்ட தொடக்கக்கல்வி அலுவலர் அப்படியே மெய்சிலிர்த்துப்போனார்.
அரசுப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் காட்சி அந்த உரையாடலை தனது கைப்பேசியில் பதிவு செய்து அதனை ஊக்குவிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்தக் காணொலியானது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கில உரையாடலை கண்டு பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர்.
ஆங்கிலம் சரளமாக பேச வேண்டும் என்றால் தனியார் பள்ளியைத்தான் நாட வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்தெறிந்துள்ளது கேவரோடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. அப்பள்ளிக்கு ஈடிவி பாரத்தின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்...!