நாகை மாவட்டம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுற்றுப்புறத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பலரும் இந்த மருத்துவமனையையே நம்பியிருக்கின்றனர்.
இந்த மருத்துவமனையில் துப்புரவு பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மருத்துவமனையில், மருத்துவக்கழிவுகள் தனியாக செங்கிப்பட்டியைச் சார்ந்த நிறுவனத்திற்கு தரப்படும். அதேபோல பொதுக்கழிவுகளை நகராட்சிக் குப்பைத் தொட்டியில் கொட்டப்பட்டு வந்தது.
இதனிடையே நகராட்சிக்கும், அரசு மருத்துவமனைக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கடந்த சில நாட்களாக, நகராட்சி சார்பில் குப்பையை எடுத்துச் செல்லவில்லை. இதனையடுத்து, கடந்த 1ஆம் தேதி மருத்துவமனை வாசலில், குப்பைகள் கொட்டிய தனியார் நிறுவனத்துக்கு 51 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
குப்பை எடுப்பதில் அரசு மருத்துவமனை, நகராட்சி நிர்வாகமிடையே பிரச்சினை இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜசேகர் தரப்பிலும், நகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் பிரதீப் கிருஷ்ணகுமாரும், பரஸ்பரம் தொடர்ந்து குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.