தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்கம், வெள்ளி மீன் அர்ப்பணிக்கும் வித்தியாசமான திருவிழா! - கடல்

நாகப்பட்டினம்: நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் நடுக்கடலில் அதிபத்த நாயானார், சிவனுக்கு தங்கம், வெள்ளி மீன் அர்ப்பணிக்கும் வித்தியாசமான திருவிழா நடைபெற்றது.

festival

By

Published : Aug 29, 2019, 11:13 PM IST

கி.பி. 8ஆம் நூற்றாண்டில் நாகை, நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் பிறந்தவர் அதிபத்த நாயனார். சிவபக்தரான இவர் நாள்தோறும் கடலில் வலை வீசி பிடிக்கும் முதல் மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் என்று கடலில் விட்டு விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். சில காலம் வறுமையில் வாடிய இவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் நாள்தோறும் மீன் பிடிக்கும்போது அதிபத்தர் வலையில் ஒரே ஒரு மீன் மட்டும் கிடைக்கும்படி செய்தார். இருந்தபோதிலும் வறுமையிலும் வலையில் கிடைக்கும் ஒரு மீனையும் சிவனுக்கே தினமும் அர்ப்பணம் செய்தார் அதிபத்தர்.

அவரை மேலும் சோதிக்க விரும்பிய சிவபெருமான் ஒரு நாள் அதிபத்தர் வீசிய வலையில் நவரத்தினங்கள் பதிக்கப் பெற்ற விலை மதிப்பில்லா தங்க மீன் ஒன்று கிடைக்கும்படி செய்தார். வறுமையில் வாடிய அதிபத்தர் அதனையும் சிவனுக்கு அர்ப்பணம் என்று கடலில் விட்டார். இவரது பக்தியை மெச்சிய சிவபெருமான், பார்வதியுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்து ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரம் அன்று அதிபத்தருக்கு முக்தி பேற்றுதந்ததாக நம்பப்படுகிறது.

தங்கம், வெள்ளி மீன்

இந்நிகழ்வை, போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திர நாள் அன்று அம்மீனவ கிராம மக்கள் அதிபத்த நாயனாரின் முக்திப் பேறு விழாவை கடலில் தங்க மீன், வெள்ளி மீன் பிடிக்கும் வித்தியாசமான திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.

இதையொட்டி நாகை நீலாயதாட்சி அம்மன் ஆலயத்திலிருந்து அருள்மிகு காயரோகணசுவாமி நிலாயதாட்சி அம்மனுடன் ரிஷப வாகனத்தில் நம்பியார் நகர் கடற்கரையில் எழுந்தருளுகிறார். பின்னர் அதிபத்த நாயனார் திருமேனியை நம்பியார் நகர் மீனவர்கள் படகு ஒன்றில் வைத்து நடுகடலுக்குள் எடுத்துச்சென்று அங்கு தங்க மீன், வெள்ளி மீனை சிவார்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தங்கம், வெள்ளி மீன் அர்ப்பணிக்கும் வித்தியாசமான திருவிழா!

படகில் சிவனடியார் வேடமணிந்த மீனவர்கள் கடலில் தங்க மீன், வெள்ளி மீன்களை வீச அதனை அக்கிராம மீனவ இளைஞர்கள் அதனைத் திரும்ப எடுத்து சிவார்ப்பணம் செய்யும் காட்சியும் நடத்திக்காட்டப்படுகிறது. இதனை கரையில் நின்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள், சிவனடியார்கள் கண்டு ரசித்து சுவாமி தரிசனம் செய்வது தமிழ்நாடு மட்டுமல்லாது வேறு எங்கும் காண முடியாத வித்தியாசமான திருவிழாவாக உள்ளது.

தொடர்ந்து படகில் கரை திரும்பும் அதிபத்த நாயானார் கடற்கரையில் எழுந்தருளியிருக்கும் காயரோகணசுவாமி நிலாயதாட்சி அம்மனுக்கு தங்க, வெள்ளி மீன்களை அர்ப்பணிக்க தீபாரதனையுடன் விழா நிறைவு பெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மீனவர்கள், சிவனடியார்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details