மயிலாடுதுறை: தேசிய அளவிலான போல் வால்ட் போட்டியில் அதிக மீட்டர் உயரம் தாண்டி , தங்கம் வென்று புதிய சாதனை படைத்திருக்கும் மயிலாடுதுறையைச் சேர்ந்த விவசாயி மகள் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பை இங்கு காணலாம்...
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் மாநிலங்களுக்கு இடையிலான 61-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி (இன்டர்-ஸ்டேட் அத்லெட்டிக் நேஷனல் சாம்பியன்ஷிப் 2022) ஜூன் 10-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் போல் வால்ட் எனப்படும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர் , வீராங்கனைகள் பங்கேற்றனர்.
போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சேத்திரபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இளங்கோவன் மகள் பரணிகா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவர் 4.05 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் 2018-ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கயாத்தி என்ற வீராங்கனை 4 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. புதிய சாதனையை படைத்து, சொந்த ஊருக்கு திரும்பிய விளையாட்டு வீராங்கனை பரணிகாவுக்கு பெற்றோர் மற்றும் கிராம மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.