தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாட்ஸ்-ஆப் குரூப் மூலம் சூதாட்டம் - 14 பேர் கைது! ரூ.5.15 லட்சம் பறிமுதல்! சிக்கியது எப்படி? - திருமண மண்டபத்தில் சூதாட்டம்

மயிலாடுதுறை அருகே பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வாட்ஸ்-ஆப் குழு மூலம் ஒன்றிணைத்து சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு வந்த கும்பலில் 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்களை இணைத்து வாட்ஸ்-ஆப் மூலம் சூதாட்டம்
பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்களை இணைத்து வாட்ஸ்-ஆப் மூலம் சூதாட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 10:23 PM IST

மயிலாடுதுறைமாவட்டத்தில் இரவு நேரங்களில் ஏராளமானோர் ஒன்று சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்சீவ்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது குத்தாலம் அருகே அஞ்சார்வார்த்தலை கிராமத்தில் உள்ள ஏ.கே.பி. திருமண மண்டபத்தில் பலர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒன்று கூடியுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு அவர்கள் பணம் வைத்து சீட்டுகட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களை போலீசார் சுற்றி வளைத்த போது, அங்கிருந்து சிலர் சுவர் ஏறிக்குதித்து தப்பியோடினர். மீதமிருந்த 14 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5.15 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 3 கார்கள் மற்றும் 16 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, பிடிபட்ட 14 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், தப்பியோடிய சிலரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள கடலங்குடி அரண்மனைத் தெருவைச் சேர்ந்த துரை மகன் சரவணன்(38) என்பவர் வாட்ஸ-ஆப் குழு மூலம் மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களை இணைத்துள்ளார்.

அதில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாவட்டத்தில் இரவு நேரங்களில் பல லட்சம் ரூபாயை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதும், அவர்களில் பெரும்பாலானோர் காய்கறி வியாபாரம், உணவகம் வைத்து நடத்துபவர்கள் என்பதும், அவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட போது போலீசாரிடம் சிக்கியதும் தெரிய வந்தது.

மேலும், இந்த சம்பவத்துக்கு மயிலாடுதுறை காவல்துறையைச் சேர்ந்த சிலரும் உடந்தையாக இருந்துள்ளது தெரியவந்தது. சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு திருமண மண்டபத்தை வாடகைக்கு கொடுத்த உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிய வருகிறது. பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வாட்ஸ்-ஆப் மூலம் ஒன்றிணைந்து பல லட்சம் ரூபாயை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டடுள்ள இந்த சம்பவத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பு நிலவுகிறது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இரவு நேரங்களில் குழு அமைத்து சூதாட்டம் விளையாடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்கென்று தனியாக தமிழ்நாடு அரசு காவல் சிறப்புப் படை அமைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:மயிலாடுதுறை அருகே 9 வயது சிறுமியின் மரணத்தில் மர்மம்.. வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details