கிசான் உதவித்தொகை, தொகுப்புவீடு, ஆழ்துளைக்கிணறு என அடுத்தடுத்து அரசு திட்டங்களில் பெரிய ஊழலில் அலுவலர்கள் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சுருட்டியது, கட்டாத வீடுகளுக்கு பிரதம மந்திரியின் வாழ்த்து கடிதம் வந்து கொண்டிருப்பதால் அந்த மோசடியில் தொடர்புடைய அலுவலர்கள் கலக்கத்தில் உள்ளனர். இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் கழிப்பறை கட்டும் திட்டத்திலும் தற்போது முறைகேடு அம்பலமாகியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூர் ஊராட்சி கொண்டல் பகுதி கூரைவீட்டில் வசித்துவரும் விஜயா என்பவருக்கு கழிப்பறைக்கான ரூ.11 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து 2013 டிசம்பர் 13ஆம் தேதியன்று பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. ஆனால் தற்போது வரை கழிப்பறையும் கட்டித்தரவில்லை, அதே போன்று வில்லியநல்லூர் நடுத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் ரூ.11 ஆயிரம் அளித்துள்ளதாக பணம் எடுக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டிற்கும் தற்போது வரை கழிப்பறையே இல்லை.