மயிலாடுதுறை:தமிழ்நாடு மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், அருண் குமார், மாதவன், காசி, முருகன் மற்றும் படகின் உரிமையாளர் உள்ளிட்டோர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று உள்ளனர்.
இன்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலையை பறித்துக் கொண்டதுடன் இரும்பு பைப்பால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் 5 மீனவர்கள் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து உடலில் ரத்த கட்டுக்கள் ஏற்பட்டதுடன் ஒரு மீனவருக்கு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இன்று கரை திரும்பிய மீனவர்கள் தரங்கம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை மேற்கொண்ட பின்பு மேல் சிகிச்சைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.