நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த குரவப்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பரஞ்சோதி. இவர் அந்தப் பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத்தில் ஈடுபட்டுவருகிறார். சித்த மருத்துவரான இவரது மூத்த மகன் சரவணகுமரன் இயற்கை, பாரம்பரியத்தின் மீது கொண்டிருந்த பற்று காரணமாக, தொலைந்துபோன பாரம்பரிய நெல் ரகங்களை அதன் மரபுத்தன்மை மாறாமல் மீட்டெடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில், தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் தொலைந்த பாரம்பரிய நெல் ரகங்களை தேடிச்சென்று முதற்கட்டமாக சுமார் 130 ரகங்களை மீட்டெடுத்து தனது வயலில் பயிரிட்டுள்ளார்.
பண்டைய காலத்தில் இந்தியாவில் சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இருந்ததாகவும், தற்போது அவற்றில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே காணமுடிவதாகவும், தன் வாழ்நாளில் தன்னால் முடிந்தஅளவு தொலைந்துபோன நெல் ரகங்களை மீட்டு விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்றும் கூறுகிறார் விவசாயி பரஞ்சோதி.
அசாம், ஒரிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா, சத்தீஸ்கர், மணிப்பூர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தனது தேடலை விரிவுபடுத்தி, தற்போது 1,030 தொலைந்துபோன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுள்ளார். அத்தகைய நெல் ரகங்களைத் தனது இரண்டரை ஏக்கர் வயலில் பயிரிட்டு தற்போது அவைகள் கதிர்விட்டு ’ஆயிரங்காலத்துப் பயிர்’ என்ற பழமொழியை மாற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரகங்களிலான நெற்பயிர் என அனைவரையும் வியப்படையச் செய்துள்ளார்.
இந்தியாவில் அதிகளவிலான விவசாயிகளின் தற்கொலை தன்னை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க தூண்டுகோலாக இருந்தது எனவும், விதைக்கப்படும் நெல் ரகங்களுக்கு உரம், பூச்சி மருந்து என எந்த ஒரு செலவினமும் செய்யாமல் இயற்கை சீற்றங்கள், வெள்ளம், பூச்சி தாக்குதல், என எந்தவித பாதிப்பும் ஆளாகாத பாரம்பரிய நெல் ரகங்களை பயிர் செய்து "விதைப்போம் அறுப்போம்" என்ற கொள்கையுடன் இந்த பாரம்பரிய நெல்களை விவசாயிகளிடம் கொண்டுசேர்ப்பதே தனது லட்சியம் என்கிறார்.