விவசாய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகப்பட்டினம் அவுரித் திடலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட விவசாயிகள், விவசாய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், சட்டத்திருத்த மசோதா நகலை எரிக்கும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த காவல் துறையினர், விவசாயிகளிடமிருந்து சட்டத்திருத்த நகல்களை பறித்தனர்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணியன், ”இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே அரசு மசோதாவை திரும்பப் பெற வேண்டும்.
இந்த சட்டத்தை எதிர்த்து, செப்டம்பர் 25ஆம் தேதி இந்தியா முழுவதும் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் மறியல், உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். தமிழ்நாடு இந்த மசோதாவிற்கு வழங்கிய ஆதரவைத் திரும்ப பெற வேண்டும். இந்த சட்டத் திருத்த மசோதவைத் திரும்ப பெறவில்லை என்றால் இந்தியா முழுவதும் எங்களின் போராட்டம் தொடரும்” என்றார்.
இதையும் படிங்க :திமுகவை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!