புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் கடந்த 12 நாள்களுக்கும் மேலாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்திவருகின்றனர். வட மாநிலங்களில் இருந்து வரும் கடுமையான பனிப்பொழிவையும்பொருட்படுத்தாமல், விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய விடுதலை சிறுத்தைகள் கட்சி! - farmers bills
நாகை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக, போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாகை மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகை சட்டப்பேரவைத் தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பப்பட்டன. அப்போது, திடீரென மறைத்து வைத்திருந்த பிரதமர் மோடியின் உருவ பொம்மையை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரிக்க முயன்றனர். அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அதனைத் தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை அப்புறப்படுத்தினர்.
இதனைக் கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் நாகை - காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மோடியின் உருவப்படத்தை எரித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை காவலர்கள் கைது செய்ய முயன்ற போது, காவல்துறையினருக்கும், சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் போராட்டக்காரர்களை குண்டுகட்டாக கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.