நாகை மாவட்டம் மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு கெயில் நிறுவனம், எண்ணெய் எரிவாயு எடுத்துச் செல்வதற்காக குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் மேமாத்தூர், காலகஸ்திநாதபுரம் பகுதியில் குறுவை சாகுபடிக்கு விதைவிட்டு உழவு செய்த வயல்களில் குழாய் பதிப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையினரிடம் புகார் மனு அளித்தனர்.
இந்நிலையில், முடிகண்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பாலு, மோகன்தாஸ், சிவானந்தம் ஆகியோர் தங்கள் வயல்களில் குறுவை நடவு பணிகளை செய்துள்ளனர். பயிர்கள் வளர வேண்டிய நிலையில் திடீரென்று கெயில் நிறுவனம் குழாய் பதிப்பதற்காக நடவு செய்த வயலில் பொக்லைன் இயந்திரத்தை இறக்கியதை அறிந்த விவசாயிகள், அப்பகுதி கிராம மக்கள் அங்கு குழித்தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தினர். பின்னர் பொக்லைன் இயந்திரம் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது.