நிவாரணத் தொகையை பெற்று தந்த மாவட்ட ஆட்சியருக்கு மேளதாளத்துடன் சீர்வரிசை கொண்டு வந்து நன்றி தெரிவித்த விவசாயிகள் மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பருவம் தவறிய அதீத மழையினால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழிந்தன. இதனால் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதிகள் முழுவதும் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில் தரங்கம்பாடி தாலுகா, குத்தாலம் வட்டாரத்திற்கு உட்பட்ட கடக்கம், அகர ஆதனூர், பெரம்பூர், முத்தூர், அகர வல்லம், கிளியனூர் எடக்குடி, கொடை விளாகம் ஆகிய எட்டு கிராமங்களுக்கு மட்டும் பயிர் பாதிப்பிற்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.
ஆகவே பாதிக்கப்பட்ட எட்டு கிராம விவசாயிகள், தங்களுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி பலமுறை மனு அளித்துள்ளனர். மேலும் பல்வேறு கட்ட போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, விடுபட்டு போன 8 கிராம விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, தமிழக அரசிடம் பரிந்துரைத்தார்.
அதன் அடிப்படையில் விடுபட்டு போன மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு கிராம விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் தமிழக அரசால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட உளுந்து, பயிறுக்கான நிவாரணம் சேர்த்து ரூபாய் 5 கோடியே 86 லட்சம் நிவாரணத் தொகையை தமிழக அரசு வழங்கியது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், தமிழக அரசிடம் இருந்து நிவாரணத் தொகையை பெற்றுத் தர உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு தெரிவித்து நன்றி தெரிவிக்கும் வகையில், பட்டாசு வெடித்தும், மேள தாள வாத்தியங்கள் முழங்க சீர்வரிசை எடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.
அங்கு நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதிக்கு நன்றி தெரிவித்து சீர்வரிசை பழங்களை வழங்கினர். தொடர்ந்து ஆட்சியருக்கு கேடயங்கள் மற்றும் சால்வை அணிவித்து பாராட்டினர். அதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் உற்ற நண்பனாக இருக்கும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதிக்கு சிலை வைப்போம் என்று கூறியதுடன், இவர்தான் எங்கள் மாவட்ட ஆட்சியர் என்று கூறி நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக 10 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதியாக, மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:“இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த நாடுதான் தமிழ்நாடு”- மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால்