காவிரியில் போதிய தண்ணீர் இல்லாததால், தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட இயலாது எனக் கர்நாடக அமைச்சர் சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜிடம், ஜூன் 12இல் மேட்டூர் அணை திறக்கப்படுமா எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம் எனக் குறிப்பிட்ட அவர், இம்முறை கர்நாடகாவிலும் தண்ணீர் இல்லாததால் அம்மாநில அரசு தண்ணீர் திறக்க மறுத்துவருகிறது என்றார்.
கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் சிவகுமார் கூறியதையே தமிழ்நாடு அமைச்சர் காமராஜுவும் கூறியிருப்பது விவசாயிகளிடையே பெரும் கலக்கத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மே மாதம் 28ஆம் தேதி டெல்லியில் கூடிய காவேரி மேலாண்மை ஆணையம், தமிழ்நாட்டிற்கு 9.2 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், காவிரி நீரை நம்பி இந்த ஆண்டு நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் குறுவை சாகுபடிக்குத் தயாராகிவந்தனர்.