மயிலாடுதுறை: கர்நாடக மாநிலம் குடகு மலையில் உருவாகும் காவேரி ஆறு பல்லாயிரம் மைல்கள் கடந்து மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் கடலில் சங்கமிக்கிறது. இந்தக் காவிரி ஆற்று நீரை சேமித்துவைக்கும் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி நீர் திறக்கப்படுவது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு முதல் முறையாக மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24ஆம் தேதி தண்ணீர் திறந்து வைத்தார். இதனால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த காவிரி நீரானது டெல்டா மாவட்டமான, தஞ்சை மாவட்ட கல்லணையை வந்து சேர்ந்தது. அங்கிருந்து 27ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இரவு கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான முதல் கதவணை உள்ள திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள நீர் தேக்கத்திற்கு தண்ணீர் வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து, காவிரியில் முதல் கட்டமாக 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.