நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2014ஆம் ஆண்டு ஆட்சியமைத்தபோது கிராமப்புற ஏழைகள் இலவசமாக வங்கிக்கணக்கைத் தொடங்க ஜன்தன் திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தினை அனைத்துப் பகுதிகளிலும் அமல்படுத்த தொடர் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. குறிப்பாக, பிரதமர் மோடி இத்திட்டம் புரட்சிகரமான திட்டம் என பெருமிதத்துடன் கூறினார்.
கடந்த வருடம் ஜூலை மாதம் இத்திட்டத்தில் ஜன்தன் வங்கிக்கணக்கு குறித்த புள்ளிவிவரங்களை நிதியமைச்சகம் வெளியிட்டது. அதன்படி, மொத்தமுள்ள 36.06 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்புத்தொகை 1 லட்சத்து 495 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தது. இந்த 36.06 கோடி வங்கிக்கணக்குகளில் 50 சதவிகித கணக்கை பெண்கள் வைத்துள்ளனர்.
மேலும், 28.44 கோடி வாடிக்கையாளர்களுக்கு ரூபே ஏடிஎம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜன்தன் வங்கிக்கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதால் அரசின் மானியம், உதவித்தொகைகள் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்தது.
இந்தத் திட்டத்தின் முழுப் பயன்களையும் விவசாயிகள் பெற்றுக் கொண்டார்களா? அவர்களின் தேவைகள் நிறைவேறியதா? வயல்களை வாழ்வாதாரமாகக் கொண்ட விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று கேட்டோம்.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி தமிழ்ச்செல்வன் கூறுகையில், “படிப்பறிவு இல்லாத விவசாயிகளுக்கு வங்கிக்கணக்கு வாங்கிக் கொடுத்த ஜன்தன் வங்கி திட்டம் வரவேற்கக்கூடியதுதான். இந்தக் கரோனா நெருக்கடியில் நிவாரணமாக மத்திய அரசு 500 ரூபாயை ஜன்தன் வங்கி கணக்கு மூலம் செலுத்திவருகிறது.