மயிலாடுதுறை: குத்தாலம் அருகே உள்ள சேத்திரபாலபுரம் பகுதியில் ஓஎன்ஜிசி எண்ணெய் மற்றும் எரிவாயு சேமிப்பு நிறுவனம் ஒன்று உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள எண்ணெய் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் எரிவாயு மற்றும் எண்ணெய் இங்கு சேகரிக்கப்பட்டு, சுத்திகரிப்பு செய்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நரிமணத்திற்கு அனுப்பப்படுகிறது.
இந்த சேமிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதியில் ராமாமிர்தம் தெரு, குப்பையன் காலனி, சோனாந்திடல் ஆகிய தெருக்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், இந்தப் பகுதிகளில் அமைந்துள்ள ஓஎன்ஜிசி சேமிப்பு நிலையத்தால் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்து தண்ணீர் மாசடைந்துள்ளதாகவும், குடிப்பதற்கு தகுதியற்றதாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இங்குள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் குடிநீர் காவி படிந்தும் வருவதால், தொடர்ச்சியாக பல்வேறு நோய்களுக்கு ஆளாவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரத்தை ஓஎன்ஜிசி நிறுவனம் நிறுவியது.