மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் கிழக்கு கடற்கரையோர மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்ல மாட்டார்கள்.
இந்த மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் இந்த 61 நாள்கள் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கத் தடைக்காலமாக கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
அதன்படி ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கிய மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14ஆம் தேதி முடிவடைந்து, தற்போது மீண்டும் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுவருகின்றனர்.
தடைசெய்த வலையை வைத்து மீன் பிடித்தல்
அந்த வகையில் தரங்கம்பாடியிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள மீனவர்களும் மீன் பிடிப்பதற்காக மீண்டும் கடலுக்குச் சென்றுவருகின்றனர். இந்நிலையில் அரசு தடைசெய்த சுருக்குமடி, இரட்டை மடி வலைகள், அதிவேக குதிரைத் திறன் கொண்ட இயந்திரத்தைப் பயன்படுத்தி மீன் பிடிக்கக் கூடாது என மீன்வளத் துறை தெரிவித்திருந்தது.
ஆனால் இதுவரை சில மீனவ கிராம மக்கள் அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளை வைத்து மீன் பிடித்துவருவதாக தரங்கம்பாடி மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில் ஆலோசனை
இது குறித்து மீனவ தலைமை கிராமமான தரங்கம்பாடியில் சுருக்குமடி வலை பயன்பாட்டால் மீன்வளம் பாதிக்கப்படுவதைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூன் 25) நடைபெற்றது.
மாவட்ட மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தரங்கம்பாடி, சின்னங்குடி, சின்னமேடு, தாழம்பேட்டை, குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, பழையார், கீழ மூவர்கரை, வானகிரி உள்ளிட்ட 20 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கலந்துகொண்டனர்.
எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
- அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டை மடி வலைகள், அதிவேக குதிரைத்திறன் கொண்ட இயந்திரத்தை முற்றிலுமாகத் தடைசெய்து மீன் வளத்தைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குதல்,
- மற்ற மீனவர்கள் அரசின் தடையை மீறி சுருக்குமடி, இரட்டைமடி வலை, அதிவேக இயந்திரத்தைப் பயன்படுத்தி தொழில் செய்தால் தரங்கம்பாடி கிராமம் தலைமையில் தொழில் மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபடுதல்
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மீன்வளம் பாதிப்புகள் குறித்த ஆலோசனை மேலும் இத்தீர்மானங்களை மீன்வளத் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட அலுவலர்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்வதாகவும் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு செந்தில் பாலாஜி கொடுத்த 'ஷாக்': இப்போது ஸ்டாலின் குட் புக்கில்...!