மயிலாடுதுறையில் தமிழ்நாடுபள்ளிக்கல்வித்துறை மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டிகள் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்டது. இதில், மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுகாக்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
இந்தப் போட்டியில் மயிலாடுதுறை பல்லவராயன்பேட்டை நரிக்குறவர் காலனியில் செயல்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளியில் பயிலும் 13 மாணவர்கள் கலந்துகொண்டு, அனைத்து மாணவர்களும் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
குறிப்பாக, இப்பள்ளியின் 7ஆம் வகுப்பு மாணவர்கள் ரித்தீஷ், சாமுவேல், சதீஷ், வெற்றிவேல், அனுஷ்கா ஆகியோர் தங்கப்பரிசினை வென்றனர். மேலும் அடுத்த மாதம் திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.