நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது பெற்றோர்களை இழந்த குழந்தைகள் அனைவரும் அன்னை சத்யா அரசு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, கல்வி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார். அப்போது காப்பகத்தில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் தன்னம்பிக்கையோடும், வைராக்கியத்துடனும் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பொங்கல் நன்னாளில் மனதார வாழ்த்துவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அருகில் உள்ள அன்னை சத்யா முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் ஆதரவற்ற முதியோர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகம் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.