1926ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் சிறுகாட்டூரில் பிறந்த இவர் விருத்தாசலம் தேவாரப் பாடசாலையில் படித்தார். தருமபுரத்தில் வித்வான் பட்டம் பெற்ற இவர், கௌரவப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தேவஸ்தான பொறுப்பில் அதிக நாட்கள் பணியாற்றிய இவர், கட்டளைத்தம்பிரான் சுவாமியாக சென்னை சமய பிரசார நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
1971ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தருமபுரம் ஆதீனத்தின் 26ஆவது மடாதிபதியாக பதவியேற்றார். 49 ஆண்டுகள் மடாதிபதியாக பதவி வகித்து, வயது மூப்பின் காரணமாக, உடல்நலக்குறைவு ஏற்பட்டு, தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில் இன்று அவர் இயற்கை எய்தினார். அவருக்கு ஆதீன முறைப்படி இறுதிச் சடங்குகள் நடக்க இருக்கின்றன. அவரது மறைவு பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமாக, திருக்கடையூர் வைத்தீஸ்வரன்கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற ஆலயங்களும்; தமிழ்நாடு மட்டுமின்றி, காசி உள்ளிட்ட இடங்களிலும் நிலங்கள் உள்ளன. மேலும், பழமையான சைவ மட ஆதீனங்களில் ஒன்று தருமபுரம் ஆதீனம். இந்த ஆதீனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 27 சிவாலயங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.