மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டைநாதர் சாமி கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். இங்குக் கோயிலில் மலை மீது உமா மகேஸ்வரர், சட்டைநாதர் ஆகிய சாமிகளும் அருள் பாலிக்கின்றனர். மேலும் இக்கோயில் திருஞானசம்பந்தர் அவதார ஸ்தலமாகவும் விளங்குகிறது.
இக்கோயில் பிரம்ம தீர்த்த குளத்தில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கியதாகப் புராணம் தெரிவிக்கின்றது. இந்த வரலாற்று நிகழ்வு ஆண்டுதோறும் திருமுலைப்பால் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த 1991 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இதற்கான திருப்பணிகள் முழுமையாக நடைபெற்று முடிந்தது.
அதனைத் தொடர்ந்து 32 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மே மாதம் 24 ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில், வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தன்று ஹெலிகாப்டர் மூலம் கோபுரங்களில் மலர் தூவப் பட்டிருந்தது. மேலும் கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.