சுருக்குமடி வலை பயன்படுத்த அனுமதி மறுப்பு: கடலோரப் பாதுகாப்பு குழும காவல் துறையினர் தீவிர ரோந்து! - கடலோர பாதுகாப்பு குழும காவல் துறை
நாகப்பட்டினம்: சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்த நிலையில், மாவட்ட கடல் பகுதிகளில் கடலோரப் பாதுகாப்பு குழும காவல் துறையினர் படகில் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடலூர், நாகப்பட்டினம் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து தடைசெய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி, மீன்பிடிக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று (ஜூலை 15) மீனவ பிரதிநிதிகளிடம் அரசு நடத்திய பேச்சு வார்த்தையில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மீனவர்கள் கடலில் இறங்கி, போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கவும்; கடல் வழியாக மற்ற மாவட்ட மீனவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட எல்லைக்குள் நுழைவதை கண்காணிக்கவும் கடற்கரையில் ரோந்துப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலோரப் பாதுகாப்பு குழும காவல் துறையினர் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருமுல்லை வாசல், பூம்புகார், பழையார் உள்ளிட்டப் பல்வேறு மீனவக் கிராமங்களில் படகுகள் மூலம் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.