தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெஞ்சில் ஈரமற்றோரின் கொடுஞ்செயலால் பசுவுக்கு நேர்ந்த துயரம்! - மயிலாடுதுறை மாவட்டச் செய்திகள்

நெற்பயிரை மேய்ந்த பசுவின் இரண்டு காதுகள், வால் துண்டிக்கப்பட்ட நிலையில், மருத்துவம் பலனின்றி அது இன்று இறந்துவிட்டது. நெஞ்சில் ஈரமற்றோர் செய்த இக்கொடுஞ்செயல் ஆற்றொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பசுவுக்கு நேர்ந்த துயரம்
பசுவுக்கு நேர்ந்த துயரம்

By

Published : Sep 20, 2021, 11:51 AM IST

மயிலாடுதுறை: சீர்காழி அருகே அளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அண்ணாதுரை. இவரின் பசு கடந்த 17ஆம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த ரவி, பாலசுந்தரம், மன்மதன், சுபாஷ் உள்ளிட்டோருக்குச் சொந்தமான வயலில் மேய்ந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும் சேர்ந்து பசுவின் இரண்டு காதுகள், வால் பகுதியை அரிவாளால் வெட்டிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த பசு ரத்தம் ஒழுகியபடி மரண ஓலமிட்டு நின்றுகொண்டிருந்தது.

இதனைப் பார்த்த அதிர்ச்சியடைந்த அண்ணாதுரை, நான்கு பேர் மீது கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் வயலின் உரிமையாளர்களான ரவி, பாலசுந்தரம் உள்ளிட்டோரை கைதுசெய்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அண்ணாதுரைக்குச் சொந்தமான பசு அவர்களது வயலில் மேய்ந்து பயிர்களை நாசம் ஆக்கியதாகவும், இது தொடர்பாகப் பலமுறை அண்ணாதுரையிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளாததால் ஆத்திரத்தில் பசுவை வெட்டியதாகவும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், தொடர்ந்து காயமடைந்த பசுவுக்கு சாமியம் கால்நடை மருத்துவமனையைச் சேர்ந்த அரசு கால்நடை மருத்துவர் சரவணன் சம்பவ இடத்திற்கு வந்து சிகிச்சை அளித்துவந்தார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று பசு மூன்று மணி நேரம் துடிதுடித்து இறந்தது. பசு இறந்ததும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்தச் சம்பவம் அளக்குடி கிராம மக்களிடையே பெருந்துயரை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சாதி மோதல்... பழிக்குப்பழி... தொடர் கொலை: 8 எஸ்.பி.க்கள் குவிப்பு - நெல்லையில் திக்... திக்...

ABOUT THE AUTHOR

...view details