நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அருகே திருச்சம்பள்ளியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பருத்தி ஏலம் நேற்று (22.06.20) நடைபெற்றது.
இதில் 900-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 5500 குவிண்டால் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.மேலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கட்டிடத்தில் 2000 குவிண்டால்வரை மட்டுமே வைக்க இடவசதி உள்ள நிலையில், மேலும் 2000 குவிண்டால் பருத்தியை விவசாயிகள் விற்பனைக்கூட வளாகத்தில் வாசல்வரை ஏலத்துக்காக அடுக்கி வைத்தனர்.
இடப்பற்றாக்குறை காரணமாக சுமார் 1500 குவிண்டாலை இறக்கி வைக்க முடியாததால் விவசாயிகள் திருப்பி எடுத்து சென்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் தனியார் வியாபாரிகள் குறைந்த விலைக்கு ஏலம் கேட்பதாக குற்றம்சாட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நேற்று நடைபெற்ற ஏலத்தில் தனியார் வியாபாரிகள் பங்கேற்கவில்லை.
இதையடுத்து, பருத்தியின் ஈரப்பதத்தை அளவிட்ட இந்திய பருத்திக்கழக அதிகாரிகள் 12 சதவீகிதம் வரை ஈரப்பதம்கொண்ட 1500 குவிண்டால் பருத்தியை குறைந்தபட்சம் 1 குவிண்டாலுக்கு ரூ.5330 முதல் அதிகபட்சம் ரூ.5550 வரை ஏலம் எடுத்துச் சென்றனர்.