மயிலாடுதுறை:விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 22 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்கள், சாராயம் விற்பவர்களை காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள 14 காவல் நிலைய சரகங்களில் கள்ளச்சாராயம் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக மதுபானம் கடத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்த 68 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 5 ஆயிரத்து 470 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் தற்போது வரை, மாவட்டத்தில் தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த 10 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திருச்சி மண்டல ஐஜி கார்த்திகேயன் தலைமையில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன் மற்றும் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் நிஷா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று (மே 16) நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலத்திற்கு அருகே உள்ள மாவட்டம் என்பதால், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சாராயம் கடத்தி வருவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி மாநிலத்தை இணைக்கும் எல்லை சோதனைச் சாவடிகளில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும், கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு ஐஜி உத்தரவிட்டார்.