மயிலாடுதுறை நகராட்சிப் பகுதியில் உள்ள 36 வார்டுகளில் பாதாளச்சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இதற்காக நகரின் எட்டு இடங்களில் பம்பிங் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கழிவு நீரேற்று நிலையங்களில் மோட்டார்கள் பழுதடைந்ததால் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தக் கழிவுநீரானது மழைநீர் செல்லும் வாய்க்கால்கள், காவிரி ஆற்றின் கிளை வாய்க்கால்கள், குளங்கள் ஆகியவற்றில் சேர்கிறது.
இதனால் மயிலாடுதுறை நகரில் கொசுக்கள் உற்பத்தியாகி, பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களில் கச்சேரி சாலை, சின்னக்கடைவீதி, கிளை சிறைச்சாலை உள்ளிட்ட இடங்களில் பாதாள சாக்கடைக் குழாய் உடைந்து, கழிவுநீர் வெளியேறியதால், மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளங்கள் உருவாயின. பின்னர் பள்ளங்கள் மட்டும் சரி செய்யப்பட்டன.
தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இது குறித்து, தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
மாவட்ட ஆட்சியரை சூழ்ந்த பொதுமக்கள் இதனையடுத்து, மயிலாடுதுறை நகராட்சியில், கழிவு நீர் சாலையில் ஓடுவது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரவின்நாயர் இன்று காலை முதல் ஆய்வு மேற்கொண்டார். பல்வேறு பகுதிகளில் ஓடும் கழிவு நீரைக் கண்டு மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சியடைந்தார். பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரை சூழ்ந்துகொண்டு தங்களுக்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும், விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரவின்நாயர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவருக்கு 17 ஆண்டுகள் சிறை!