மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த அதீத கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் கனமழையால் நீரில் மூழ்கியுள்ள சம்பா, தாளடி பயிர்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரிடையாக பார்வையிட்டு மீட்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரே நாளில் 25 சென்டிமீட்டர் என அதீத கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சீர்காழியில் 44 சென்டிமீட்டர் மழைப்பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 200 ஏக்கரில், 87 ஆயிரத்து 500 ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
15ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புப்பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 257 கிராமங்கள் பாதிக்கப்பட்டு 2,752 வீடுகள் சேதமடைந்ததால் 58 முகாம்களில் 32,800க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. 10 துணை மின் நிலையங்கள்; 2,260 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன; 200 மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன.
இதனால், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இருந்து 354 மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். 80 சதவீதத்திற்கு மேல் பணிகள் முடிவடைந்து மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களாக மழைநீர் வடியாத நிலையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
மழையால் சீர்காழி, கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள பச்சைபெருமாள்நல்லூர் அரசு உதவி பெறும் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். தொடர்ந்து அவர்களுக்கு உணவுகளை வழங்கி குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து மாதானம் அருகே உமையாள்பதி கிராமத்தில் நீரால் சூழப்பட்ட குடியிருப்பு காலனி பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களைச் சந்தித்தார். அதே பகுதியில் இடுப்பளவு நீரில் மூழ்கிய சம்பா பயிர்களை நேரிடையாக சென்று பார்வையிட்டார்.
அப்போது மூழ்கிய பயிர்களை எடுத்து வந்து முதலமைச்சரிடம் காண்பித்து வேதனை தெரிவித்த விவசாயிகளிடம், உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஆறுதல் கூறினார். சீர்காழி பேருந்து நிலையத்தில் அதீத கன மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 2,000 நபர்களுக்கு 5 கிலோ அரிசி, பாய், போர்வை மற்றும் மளிகை பொருட்கள் ஆகிய நிவாரண உதவிகளை வழங்கினார்.