காவிரி ஆறு கர்நாடக மாநிலம் குடகில் தொடங்கி கடைசியாக நாகை மாவட்டம் பூம்புகார் கடலில் கலக்கிறது. காவிரி ஆற்றின் கடைசி தடுப்பணை கடைமடை பகுதியான நாகை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூர் கிராமத்தில் உள்ளது. இந்த தடுப்பணையில் உள்ள அனைத்து மதகுகளும் சேதமடைந்துள்ளதால் தற்போதுதான் மதகுகளை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
மேலும் தடுப்பணையின் இரு கரைகளிலும் உள்ள கான்கிரீட் தடுப்புச் சுவர்கள் புதுப்பிக்கும் பணியும் நடைபெற்றுவருகிறது.
பாசனத்திற்காக கல்லணையிலிருந்து காவிரி ஆற்றுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு, வந்துகொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வார காலத்தில் இந்த கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரும். எனவே இந்த தடுப்பணை மூலம் தண்ணீர் சேமித்தால் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும். இதனால், இந்த காவிரி ஆற்றின் மதகுகளை குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் தற்போது காலம் தாழ்த்தி சீரமைத்து வருகின்றனர்.
மதகுகள் சீரமைக்கும் பணி தாமதம்! இதனை முன்னதாகவே செய்திருந்தால் செய்யக்கூடிய பணி தரமாகவும், விவசாயிகளுக்கு பயனுள்ளதாகவும் இருந்திருக்கும். தற்போது அவசர அவசரமாக செய்யக்கூடிய பணி தரமற்ற நிலையில் இருக்கும் என பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.