மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பணிமனைகளில் இயக்கப்படும் பேருந்துகள் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், “மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூன்று அரசு போக்குவரத்துப் பணிமனை கழகங்களிலும் நகரப் பேருந்து, புறநகரப் பேருந்து என 137 அரசுப் பேருந்துகள் உள்ளன. இதில், மயிலாடுதுறையில் 70 பேருந்துகளும், சீர்காழியில் 41 பேருந்துகளும், பொறையாரில் 26 பேருந்துகளும் உள்ளன.
இதில், மயிலாடுதுறை பணிமனையில் இருந்து இயக்கப்படும் 70 பேருந்துகளில், தற்போது காலை 7 மணி வரை செல்ல வேண்டிய 69 பேருந்துகளில் 47 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மேலும் பொறையார், சீர்காழி பணிமனையில் உள்ள பேருந்துகள் அனைத்தும் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. சராசரியாக 83 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்.. தொ.மு.ச அறிவிப்பு!
அதேபோல், கோவை புறநகர் பகுதிகளான கருமத்தம்பட்டி மற்றும் சூலூர், அன்னூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் போக்குவரத்து பணிமனைகளில் இருந்து, இன்று (ஜன.9) அதிகாலை முதல் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது என கோவை மண்டல பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு பஞ்சப்படி வழங்கப்பட வேண்டும், ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப், பிஎம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஜன.9 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்தன.
இதையும் படிங்க:விழுப்புரம் கோட்டத்தில் அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கும்!
இந்நிலையில் நேற்று (ஜன.8) சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை ஆணையம், தமிழ்நாடு போக்குவரத்து துறை, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால் இன்று (ஜன.9) முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். அதன்படி, நள்ளிரவு முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அழைத்தால், மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயார் எனவும் தொழிற்சங்கம் தரப்பில் கூறப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஈரோட்டில் 700க்கும் மேற்பட்ட பேருந்துகளின் இயக்கம் நிறுத்தம்!