மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காளி கிராமத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியப் பொருளாளர் ஸ்ரீதரின் தந்தை ராமச்சந்திரன், கடந்த நவ.8-ஆம் தேதி இறந்ததை அடுத்து, நேற்று அவருக்கு படத்திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ராஜவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டு, ராமச்சந்திரன் படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பேசியதாவது, “தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடும். புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் தனித்து போட்டியிடும். எஸ்சி, எஸ்டி மக்கள் மீது அடக்குமுறை நடைபெறுகிறது. திமுக, அதிமுக ஆட்சியில் மக்களை ஒடுக்குமுறைக்கு ஆளாக்குகின்றனர். சாதியற்ற சமூகத்தை உருவாக்க வேணடும்.
நடிகை குஷ்பு அனாவசியமாக பேசுகிறார். குஷ்பு செல்லும் நோக்கம் தவறாக உள்ளது. மன்னிப்பும் கேட்கவில்லை, தவறாக வந்துவிட்டது என்று கூட சொல்லவில்லை. அவர் 16 வயதில் சினிமாவில் நடிக்க வந்தவர். கிராமத்தில் இருக்கக்கூடிய பெண்களை சந்தித்திருந்தால் தெரியும். சினிமா மாயையில்தான் தமிழகம் இருந்து வருகிறது. குஷ்பு மட்டுமல்ல, எந்த அரசியல் கட்சியினரும் ஒடுக்குமுறையைப் பின்பற்றுவது கண்டிக்கத்தக்கது.