நாகப்பட்டினம்: திருமருகல் ஒன்றியம், கோட்டூர் ஊராட்சி மேல தெருவைச் சேர்ந்தவர், நீலாவதி. இவரது கணவர் செல்லையன் இறந்துவிட்டார்.
இவரது மூத்த மகன் புகழேந்திரன்; படுத்த படுக்கையாக இருக்கும் மாற்றுத்திறனாளி. மேலும், நிவேதா, சுவேதா, வினோதினி ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர். இவர்கள் விவசாயக் கூலி வேலைக்குச் சென்று வாழ்கையை நடத்தி வருகிறார்.
இவர், கடந்த 2017ஆம் ஆண்டு திருமருகல் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.
எவ்வாறு நடந்தது பணப்பட்டுவாடா?
2015ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய், கழிவறை கட்ட 13 ஆயிரம் என 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
ஒன்றிய அரசு 1 லட்சத்து 20 ஆயிரம், மாநில அரசு 1 லட்சத்து 20 ஆயிரம் என நான்கு கட்டமாக நிதி வழங்கப்படுகிறது.
ஒன்றிய அரசின் நிதி நேரடியாக வங்கிக் கணக்கிலும், மாநில அரசின் பயனாளிக்கு காசோலையாகவும் வழங்கப்படுகிறது. அதன்படி வழங்கப்பட்ட தொகைகளில் விவரம் தெரியாத நீலாவதியின் நிலையை அறிந்த ஒப்பந்தகாரர்கள் மற்றும் அப்போது இருந்த அரசு அலுவலர்கள் அவருக்கு சரியாகத் தொகை சென்று சேராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
திக்கற்று நிற்கும் நீலாவதி
உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் இல்லாத நிலையில், செய்வதறியாமல் இருந்த நீலாவதி, கட்டி முழுமை பெறாத வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக தனது பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். மேலும், அருகில் அவருடைய சிறிய கூரை வீடும் முழுமையாக சேதம் அடைந்ததால் தனது மாற்றுத்திறனாளி மகன், பெண் பிள்ளைகளோடு கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்.
மேலும், முழுமை பெறாத வீட்டில் ஜன்னல், கதவு உள்ளிட்ட எதுவும் இல்லாமலும், சுவர்கள் பூசாமலும் இருப்பதால் பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு அல்லல்படுவதாகவும், அருகில் உள்ள நீர் நிலைகளில் இருந்து விஷ ஜந்துக்களின் அச்சுறுத்தல் ஒருபுறம் இருப்பதாகவும் நீலாவதி வேதனை தெரிவிக்கின்றார்.
ஒப்பந்தகாரரின் அலட்சியம்
உள்ளாட்சி அமைப்பு வந்த பிறகு இது குறித்து தங்கள் பகுதி ஊராட்சி மன்றத் தலைவரிடம் முறையிட்ட பிறகும் சம்மந்தப்பட்ட ஒப்பந்தகாரர்கள் வந்து வீடு கட்டித்தருகிறோம் என்று இழுத்தடித்து வருவதாகவும், தமிழ்நாடு அரசு வீட்டினை கட்டிக்கொடுத்து தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் சிறுமி வினோதினி கூறுகிறார்.
வீடின்றி தவிக்கும் அவலைப் பெண் 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் அனைவருக்கும் சொந்தமான வீடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்ட இத்திட்டத்தை முறையாகவும், சரியாகவும் நடைமுறைப்படுத்தினால் இதுபோன்ற அவலங்களை தவிர்க்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:ரூ.5 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்திருந்த ரவுடி படப்பை குணா - அதிரடியாக மீட்ட வருவாய்த்துறையினர்